Thursday 6 September 2018

போலி மருந்துகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

மே மாதம் 2018 இல், போதை மருந்துகளைக் களைவதற்கு ஒரு “தடயவியல் மற்றும் கண்காணிப்பு” திட்டத்தை “மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம்” என்றொரு அமைப்பு அங்கீகாரம் செய்தது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்திய மத்திய மருந்து ஒழுங்குமுறை அலுவலகம், போலி மருந்துகள், அவை பரவும் முறை, அவை இடமாற்றம் மற்றும் சந்தையில் பரப்பும் முறை ஆகியவற்றைக் கண்டறியும் பணியைக் கொண்டிருக்கும் ஒரு பணிக்குழுவை உருவாக்குவதற்கான செயலில் ஈடுபட்டது. அத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்தக் குழு உழைக்கு என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அவற்றில் வெற்றியும் கிடைக்கும் என நம்புகிறது. இக்குழு அதற்கான விளக்கக்காட்சியை அக்டோபர் 2018 இல் சமர்ப்பிக்கும்.



இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மருந்துகளிலும் கண்டறியப்பட்ட தனித்த அடையாள குறியீடு UIC (Unique Identification code) மூலம் பல்முனை தொழில்நுட்பம் செயல்படும். எங்கெங்க்கு மருந்து செல்கிறதோ அங்கெல்லாம் இந்தப் பல்முனை தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும். இந்தத் தொழில்நுட்பத்தில் மோசடி எதுவும் செய்ய முடியாது; இந்தப் பயனைப் பயன்படுத்தி மருந்துகளின் ஒவ்வொரு விவரமும் பாதுகாப்பாகக் காப்பகப்படுத்தப்படும். இதன்படி போலி மருந்துகளுக்கு எதிராகப் போராட “இந்திய தேசிய நிறுவனம்” மற்றும் நிடி ஆயோக் நிறுவனம் இந்தப் பல்முனை தொழில்நுட்பம் வழி (blockchain technology) கருத்து ஆதாரம் என்ற முறையைப் பயன்படுத்தி வேலை செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation – WHO) நவம்பர் 2017 ஆம் ஆண்டில் வெளியான ஒரு பெரிய ஆய்வுக் கூற்றின்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் அதிகம் உள்ள நாடுகளில் விற்பனை செய்யப்படும் மருந்து மற்றும் உடல் நலம் சார்ந்தப் பொருட்கள் தவறாகத் தயாரிக்கப்பட்டோ அல்லது தரம் குறைந்தோ உள்ளது. போலி மருந்து விற்பனை ஒரு நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை மட்டும் அல்லாமல், மனித குலத்திற்கு ஒரு ஆபத்தாகவும் அமைகிறது. தரமற்ற மருந்துகளைக் கண்டறிவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அவற்றில் சில முற்றிலுமாகப் போலியாகவும் சில முற்றிலும் வலு இழந்தும் காணப்படும் (அதாவது அம்மருந்து அவை கொடுக்கக் கூடிய பலனை இழக்கும் செயல்). தொடர்ந்துப் போலி மருந்துகளை எடுத்துக் கொள்வது தாமதமான சிகிச்சையில் தொடங்கி மிக ஆபத்தான பக்க விளைவுகள் வரை ஏற்படும் பிரச்சினைகளில் கொண்டு வந்து நிறுத்திவிடும். பெரும்பாலும் நுகர்வோருக்குத் தாங்களது வீட்டில் போலி மருந்துகளைச் சோதனையிடும் உபகரணங்கள் இருக்காது, ஆனால் அதே நேரத்தில் போலியான மருந்துகளை அடையாளம் காணவும் அவற்றைத் தவிர்க்கவும் சில வழிகள் உள்ளன.

போலி மருந்துகள், அழகு சாதன பொருட்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.25 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், மருந்துகள் அழகுச் சாதனப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றி தகவல் தருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த ஊக்கத்தொகை, கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பில் அதிக பட்சமாக 20 சதவீதம் அல்லது ரூபாய் 25 லட்சத்துக்கு மிகாமல் ஒவ்வொரு தகவலுக்கும் வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகையில் முதல் தவணையாக 25 சதவீதத் தொகை, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது வழங்கப்படும். அடுத்த 25 சதவீத ஊக்கத்தொகை, முதல் நீதிமன்றத்தில் அரசாங்கத்துக்கு சாதகமாக வழக்கு முடியும் போது வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீத ஊக்கத்தொகை நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் மேல் முறையீடு நிலுவையில் இல்லாமல், கடைசியாக வழக்கு அரசாங்கத்துக்கு சாதகமாக முடியும் போது வழங்கப்படும். மத்திய, மாநில அரசாங்கங்களின் கீழ் இயங்கும் மருந்துக் கட்டுப்பாடு துறையினருக்கோ அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கோ, போலி மருந்துகள் பற்றிய தகவல்களைக் கொடுக்க, தகவல் தெரிவிப்பவர்கள் www.cdsco.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும் என்று சுப்புராஜ் கூறியுள்ளார்.

இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் போலி மருந்துகள் என்பது ஒரு மிகப் பிரச்சினையாக இருக்கிறது. பொதுவாக மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இலாபத்தை மையாமாக வைத்தே இயங்குகின்றன. அவ்வாறான மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் இலாபகரமானவை என்பதால், பலவிதமான போலி மற்றும் கள்ளத்தனமா மருந்துகள் உருவாகி, நமது மனித உயிர்களுக்கு மிகப்பெரிய உயிர் பயம் ஏற்படுத்துகின்றன.
இவை உண்மையிலேயே நல்ல மருத்துதானா என்று சோதனையிடும் “மருந்துகளின் உண்மைத்தன்மை பரிசோதனை” மிகவும் எளிதான பணி அல்ல, ஆனால் பின்வரும் விவேகமான செயல்களைப் பின்பற்றுவதன் மூலம் அவற்றைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

1) மருந்துகளின் சிப்பமிடலைச் (Packaging) சரிபார்க்கவும்:
ஒவ்வொருமுறை மருந்து வாங்கும் போதும் அவை எவ்வாறு பொட்டலமிடப்பட்டுள்ளன (சிப்பமிடல் – ஆங்கிலத்தில்: Packaging) என்று சோதித்து அறிந்திடல் வேண்டும். மிகவும் அசாதாரண எழுத்துருக்கள், லேசான அச்சு வண்ணம் மற்றும் எழுத்துப்பிழை பிழைகள் போன்ற விபரங்களை மருந்துப் பொட்டலத்தில் சரிபார்க்க வேண்டும். அதேபோல் நீங்கள் முன்னர் வாங்கிய மருந்துகளில் இருந்து இப்போது வாங்கப்படும் அதே மருந்தின் பொட்டலம் வேறுபடுகிறதா என்பதையும் பகுப்பாய்வு செய்ய வேண்டும். இவ்வாறு வாங்கப்படும் மருந்துகளை நாமாகவே சோதனைக்கு உட்படுத்துவது போலி மருந்துகளை அடையாளம் காண்பதில் மிகவும் எளிமையான வழியாகும்.

2) சேதம் இல்லாத பாதுகாப்பு முத்திரையுள்ள மருந்துகள்:
பெரும்பாலும் புட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள் மருந்துகளில் (பாட்டில் மருந்துகளில் – ஆங்கிலத்தில்: Bottled Medicines) பாதுகாப்பு முத்திரை (Security Seal) இருக்கும். அவை மற்ற பிற மருந்துகளில் கூட இருக்கலாம். அவ்வாறான பாதுகாப்பு முத்திரை சேதமடைந்து இருக்கிறதா என்று சோதித்து அறிய வேண்டும். மருந்துப் புட்டியின் மூடியில் ஏதாவது ஒர் சிறிய கீரலோ அல்லது இடைவெளியோ அந்தப் பாதுகாப்பு முத்திரையை உடைத்திருக்கிறதா எனச் சோதியுங்கள். அவ்வாறு இருந்தால் உடனே நீங்கள் வாங்கிய மருந்துக் கடைக்குச் சென்று உடனடியாக மாற்றிவிடுவது நல்லது.

3) மாத்திரைகளின் தன்மை மற்றும் மருந்தளவு அட்டவணை பரிசோதனை:
நீங்கள் வாங்கிய மருந்தின் நிறம், மருந்தளவு, அதன் சீரான தன்மை, நிலைத்தன்மை (அதாவது மாறும் தன்மை), மற்றும் வடிவம் போன்ற தன்மைகளுடன் அந்த மருந்துகளின் வெளித் தோற்றத்தில் வித்தியாசத்தையும் நன்கு சோதித்து அறிய வேண்டும். அவற்றில் ஏதாவது சிக்கலான அல்லது பெரிய வித்தியாசம் தெரிந்தால் உடனடியாக அவை போலியானதா உண்மையானதா என்பதைத் தீர்மாணித்து விட முடியும். சில நேரங்களில் மருந்தின் அளவு குறைந்து காணப்பட்டால் அவை போலியென மிக எளிதாகச் சொல்லி விட முடியும்.

4) மாத்திரைகளின் வெளித் தோற்றம் ரீதியான பண்புக்கூறுகள்:
ஆய்வு அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு கூறியதுபோல், மருந்து மாத்திரைகளில் கவனிக்கப்பட வேண்டிய மிகப் பொதுவான வெளித் தோற்றம் ரீதியான பண்புக்கூறுகள் என்ன என்ன என்பதைக் கீழே காணலாம்.
•மிகவும் சிறிய அளவிலான மாத்திரைகள் அல்லது மாத்திரைப் புட்டியின் அடிப் பாகத்தில் அதிகமாகக் கொட்டிகிடக்கும் மாத்திரைகளின் தூள்கள். அதாவது போலி மருந்துகள் சிலவை ஒழுங்கில்லாமலோ அல்லது தரமற்றோ தயாரிக்கப் பட்டிருந்தால் மாத்திரைப் புட்டியின் அடிப் பாகத்தில் தூள் தூளாகக் கொட்டிக் கிடக்க அதிக வாய்ப்புள்ளது. மருந்துகளைச் சோதனையிடும் பொழுது இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
•அதிகமாக வெடித்து அல்லது விரிசல் விட்டுக் காணப்படும் மாத்திரைகள்.
•மாத்திரைக் கொள்கலன் சுவர் மற்றும் மருந்து மாத்திரைகளின் மேற்பரப்பின் மீது ஒருவகையான படிக தோற்றம் இருந்தாலும் அவை போலியானதாகவோ அல்லது நாட்பட்டதாகவோ இருக்கலாம். மேலும் அவை தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் பட்டிருக்கலாம்.
•மாத்திரகளில் காணப்படும் தேவையற்ற வீக்கம், கரும்புள்ளிகள் மற்றும் நிறமாற்றத்தை வைத்தும் அவை போலியானதாகக் கருதலாம்.

5) ஒவ்வாமை மற்றும் எதிர்பாராத பக்க விளைவுகள்:
நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான மருந்துகள் மிதமான அல்லது மிகக் குறைவான பக்க விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் ஒவ்வொரு முறையும் மருந்துகள் உண்ணும் போதும் வரும் ஒவ்வாமையைக் கணக்கில் கொள்ளும் முன், உங்களின் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் சாப்பிடும் மருந்துகளிலிருந்து சில எதிர்பாராத அல்லது பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளை உங்களால் அறிய முடிந்தால் அல்லது கவனித்தால் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது. இம்மாதிரிக் கொடிய பக்க விளைவுகள் அல்லது ஒவ்வாமை ஏற்படுவதை வைத்தும் நாம் உட்கொள்ளும் மருந்தின் நம்பகத்தன்மையை அறிந்துக் கொள்ள முடியும். அதாவது அம்மருந்துகள் போலியாகக் கூட இருக்கலாம்.

6) மருந்தின் விலை:
நீங்கள் அடிக்கடி ஒரே மாதிரியான மருந்துகளை வாங்குவோர் என்றால் இந்த முறையில் போலி மருந்துகளைக் கண்டறிவது மிகவும் எளிதாக இருக்கும்.
அதாவது நீங்கள் அடிக்கடி வாங்கும் மருந்தின் விலை வழக்கமான விகிதத்தைவிட மிகக் குறைவாக இருந்தால், அவற்றை இருமுறை சோதித்து அறிய வேண்டும். ஏனென்றால் போலி மருந்து நிறுவனங்கள், மலிவான விலையில் மருந்துகளை வழங்குவதன் மூலம் எப்போதும் மருந்து வாங்கும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்து ஏமாற்றிக் காசு சம்பாதிக்கும் வாய்ப்பாகக் கூட இருக்கலாம். இம்மாதிரியான விடயங்களில் சற்றே தெளிவாக இருந்தாலே போதும் போலி மருந்துகளை அடையாளம் கண்டுவிடலாம்.

7) இணையத்தின் மூலம் அல்லது குறுந்தகவல் மூலம் மருந்துகள் சரிபார்க்கும் முறை: இம்முறையில் இணையதளத்தின் மூலம் மற்றும் குறுந்தகவல் (SMS) மூலம் மருந்துகளைப் போலியா இல்லை தரமானவையா என்பதைச் சரிபார்க்க முடியும். பார்மாசெக்யூர் (PharmaSecure) என்னும் தனிப்பெரும் நிறுவனம் உண்மையாகவே நல்ல மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் சேர்ந்து போலி மருந்துச் சந்தைக்கு எதிராகப் பணிபுரிகிறது. ஒரு “தனித்த அடையாளக் குறியீடு” (ஆங்கிலத்தில்: Unique Identification Code) உடன் ஒரு பார்கோடோடு (பார்குறியீடு – ஆங்கிலத்தில்: Barcode) சேர்த்து மருந்துப் பொதிகளில் அல்லது கீற்றுகள் மீது அச்சிடப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

குறுந்தகவல் முறை:
மருந்துகளை வாங்க்கும் நுகர்வோர் கொள்முதல் செய்யப்படும் மருந்துகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பின்வரும் முறையில் குறுந்தகவல் அனுப்பித் தெரிந்து கொள்ளலாம். மருந்துப் பொதிகள் அல்லது கீற்றுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் “தனித்த அங்கீகரிப்புக் குறியீட்டை” (Authentication code) குறுந்தகவலில் +91-9901099010 என்ற எண்ணிற்கு அனுப்பினால் அவற்றிற்குப் பதிலாக அம்மருந்தை உண்மையாகவே தயாரித்த நிறுவனம் அவற்றின் “உண்மைத் தன்மையை” உறுதிப் படுத்தி தகவல் அனுப்பும். அவ்வாறு ஒரு பதில் தகவல் கிடைக்கப் பெறாவிடில் நாம் அவை நிச்சயமாகப் போலி மருந்தாக இருக்க அதிகவ் வாய்ப்புகள் உள்ளது.

இணையத்தில் சோதித்து அறியும் முறை:
•பார்மாசெக்யூர் (PharmaSecure) என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
•அங்கே சென்று உங்கள் நாட்டை முதலில் தெரிவு செய்யவும்.
•பின்னர் உங்களுடைய செல்பேசி எண் (Mobile Number) மற்றும் மருந்துப் பொதியில் அச்சிடப்பட்டுள்ள  “தனித்த அங்கீகரிப்புக் குறியீட்டை” (Authentication code) உள்ளிடவும்.
•தற்போது இறுதிச் செயலாக அங்கே காணப்படும் “சொல் சரிபார்ப்பை” (word verification) உள்ளிட்டு சரிபார் (VERIFY) என்ற பொத்தானை அழுத்தவும்.
அவ்வளவுதான். இவ்வாறு செய்தவுடன், உண்மையிலே அந்த மருந்துப் போலி இல்லாமல் இருந்தால் உங்களின் செல்பேசி எண்ணுக்கு ஒரு சரிபார்ப்பு குறுந்தகவல் பெறுவீர்கள். இல்லையெனில் அந்த மருந்து போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது.
குறிப்பு:
•இங்கே “அங்கீகார குறியீடு” (Authentication code) என்பது தொகுதி எண்ணிலிருந்து (Batch Number) இருந்து வேறுபட்டது ஆகும்.
•இந்த “அங்கீகார குறியீடு” அனைத்து மருந்துகளின் கீற்றிலும் பொதியிலும் அச்சிடப் பட்டிருக்கும் என்று சொல்லி விட முடியாது. தவிர சில விலை உயர்ந்த மருந்துகளில் மட்டுமே இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இம்மாதிரியான போலிமருந்துகளைக் கண்டு அறியும் முறை சற்றே பின் தங்கி உள்ளது என்றே சொல்லலாம்.

8) மருந்து விற்பனையாளர்களைச் சோதித்தறிதல்:
இந்த மருந்தக வர்த்தகம் எனப்படும் துறை பெருமளவில் வெவ்வேறு விதமான மருந்து நிறுவனப் பெயர்கள் கொண்ட கடல் வெள்ளம் போன்று உள்ளன. நல்ல பெயர் கொண்ட மருந்துக்கடை அல்லது நற்பெயர் கொண்ட மருந்து தயாரிக்கும் நிறுவங்களிடம் இருந்து தமக்குத் தேவையான மருந்துகளை வாங்குவது நாம் போலியான மருந்துகளை வாங்கும் வாய்ப்புகளைப் பெரிதும் குறைத்து விடும். இதனால் தகுதியற்ற மற்றும் மருந்துகளின் மீது படிப்பறிவில்லாத அல்லது குறைந்த தகுதி வைத்துக் கொண்டு விற்பனை செய்யும் விற்பனையாளர்களிடமிருந்து நமது உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதை நிச்சயமாக நிறுத்த வேண்டும்.

9) மருந்து அட்டையில் காணப்படும் விபரங்கள்:
காலாவதியாகும் திகதி, தொகுப்பு எண் மற்றும் அந்த மருந்து உற்பத்தியாளரின் முகவரி போன்றவை உள்ளே இருக்கும் மருந்து அட்டையைப் (முதன்மை தொகுப்பு) போன்றே வெளியில் உள்ள மருந்து பொதியிலும் (கொள்களன்) இருக்கிறதா என்பதை சேர்த்து வைத்துச் சோதித்து அறிய வேண்டும். அவற்றில் சிறிதேனும் மாற்றம் இருந்தால் அந்த மருந்து பெரும்பாலும் போலியாகவே இருக்க முடியும். மேலும் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க, மேற்கூறியவாரு இணையத்திலும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.  அல்லது குறுந்தகவல் அனுப்பியும் சோதனை செய்யலாம்.

10) மருந்து உற்பத்தியாளர் முகவரி சரிபார்க்கவும்:
ஒரு நன்கு அறியப்பட்ட சர்வதேச மருந்து நிறுவனமாக இருந்து மேலும் பெரிய நற்பெயருடன் கண்காணிப்பு அமைப்பில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனமாக இருந்தால் மட்டுமே இங்கே மருந்து உற்பத்தியாளரின் முகவரியைச் சரிபார்ப்பது என்பது எளிமையான மற்றும் எளிதானதாக் இருக்க முடியும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் போலி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உண்மையான நிறுவனங்களின் சரியான முகவரியை அச்சிடக் கூடிய வாய்ப்பு உள்ளது. இம்மாதிரியான சந்தர்ப்பத்தில், அந்தத் தயாரிப்பாளரின் முகவரியைக் கண்டரிய முடியுமா என்பதைச் சோதனை இடவும். அதாவது சரியான இட முகவரி இருக்கிறதா அல்லது வெறும் நாட்டின் பெயர் மட்டும் அச்சிடப் பட்டு உள்ளதா என்பதை சரிபார்க்கவும். இவற்றில் ஏதாவது வேருபட்டாலும் அவை போலி மருந்தாக இருக்க வாய்ப்பு உள்ளது என்ற சந்தேகம் அங்கே எழ வேண்டும்.

போலி மருந்துகள் தொடர்பான அபாயங்கள்
போலி மருந்துகள் தொடர்பான ஆபத்துகள் நமக்குப் பல உடல்நலம் சார்ந்த 
பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்
•போலி மருந்துகளில் உடலில் செயல்படக்கூடிய பொருட்களின் அளவு மிகவும் துல்லியமானதாக இருக்க வாய்ப்பு இல்லை.
•இவ்வாரு முற்றிலும் வேறுபட்ட செயல் கொண்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மிகத் தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
•மருந்து தயாரிக்கும் முறை மற்றும் தயாரிக்க பயன்படுத்திய சூழ் நிலை பெரும்பாலும் நல்ல முறையில் மருந்து தயாரிக்கும் முறையுடன் அல்லது “மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின்” கொள்கையின்படி ஒத்துப் போக வாய்ப்புகள் இல்லை.
•அது விஷத்தன்மையுள்ள செய் பொருட்கள் கொண்டிருக்கலாம்.
•அந்த மருந்துக் கொள்கலன் மீது தயாரிப்பாளரின் தரவுகளைப் போலியாக அச்சிட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.
•அது ஒழுங்காகச் சேமித்து வைக்கப்படாமலோ அல்லது சரியான முறையில் எடுத்து வரப்படாமலோ இருக்கலாம்.

நமது மருந்துச் சந்தையில் ஏராளமான போலி மருந்துகள் ஆயிரக்கணக்காக உள்ளன மேலும் அந்தப் போலி மருந்துகளின் எதிர்மறை தாக்கங்களுக்கு எல்லையே இல்லாமல் போய் விட்டது. அவை மிகவும் தீங்கு விளைவிப்பதாகவும், விசத்தன்மை கொண்டதாகவும் இருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துப் போலி மருந்துகள் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டுரையில் மேலே கொடுக்கப்பட்ட வழிமுறைகள் போலி மருந்துகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை மட்டும் குறைக்காது, ஆனால் மேலும் நமது உடல் நல ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். இவ்வாறு கள்ளத்தனமான மருந்துகளின் கறுப்பு சந்தைக்கு எதிராகப் போராடுவதற்கு நம்மால் மிகவும் சிறப்பாப் பங்களிக்க முடியும்.

No comments:

Post a Comment