Sunday, 2 September 2018

நகம் - நோய் காட்டும் கண்ணாடி!


நகம் என்றாலே பாலீஷ் போட ஒரு அழகான பாகம் என்ற அளவில்தான் பெரும்பாலோர் புரிந்து வைத்திருக்கிறார்கள்.  நகம் என்பது அழகுக்காக மட்டுமல்ல... அது ஒரு அத்தியாவசிய உறுப்பு. நகச்சுத்தி வரும்போது நகத்தில் கட்டுப் போட்டுக்கொண்டு வீட்டுப் பூட்டைத் திறந்து பாருங்கள். அப்போது புரியும், நகத்தின் அருமை!
விரலுக்கு ஒரு கவசம்போல அமைந்துள்ள நகமானது ‘கரோட்டீன்’ எனும் புரதப்பொருளால் ஆனது. கண்ணில் பளிச்சென்று தெரிகிற, வழுவழுப்பான பகுதிதான் நகத்தின் உறுதியான பாகம். இதற்குள் நரம்புகளோ, ரத்தக்குழாய்களோ இல்லை. இந்த வெளிநகத்துக்கு அடியில் ரத்த ஓட்டம் உள்ள திசுக்களால் ஆன ஒரு படுக்கை இருக்கிறது. இதற்கு நகத் தளம் (Nail bed) என்று பெயர். நகத்துக்கு உணவும் உணர்வும் உயிரும் தருகின்ற ஒரு உயிர்ப்படுக்கை இது. இந்த நகத்தளத்தைக் கடந்து வளரும் நகப்பகுதி செத்துப்போய்விடும். இதனால்தான் நுனி நகத்தை வெட்டும்போது நமக்கு வலிப்பதில்லை.

தேர்தலில் நீங்கள் ஓட்டுப்போட்டதற்கான அடையாளமாக விரலில் மையிடுகிறார்கள் அல்லவா? அந்தப் பகுதிக்குக் கீழே மறைந்திருப்பது நக வேர் (Nail bud). இதுதான் நகத்தை முளைக்க வைக்கிறது. இந்த இடத்தில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் நிறைய உள்ளன. இதனால், இந்தப் பகுதியை அழுத்தினாலே வலிக்கும். அடுத்தது, நகத்தைச் சுற்றியுள்ள  ஆங்கில எழுத்தான U வடிவத் தோல் அமைப்பு (Nail fold). நகத்தின் அடியில் காணப்படும் பிறை போன்ற அமைப்புக்கு ‘லுனுலா’ (Lunula) என்று பெயர். நகத்துடன் இணைந்த தோல் பகுதிக்கு ‘எபோநைகியம்’ (Eponychium) என்று பெயர். நகத்தைச் சுற்றியுள்ள உள்தோலுக்கு ‘பெரியோநைகியம்’ (Perionychium) என்று பெயர். நகத்தைச் சுற்றியுள்ள மேல்தோலுக்கு ‘க்யூட்டிக்கிள்’ (Cuticle) என்று பெயர். இந்த அமைப்புகள் அனைத்தும் கைவிரலுக்கும் கால் விரலுக்கும் பொதுவாகவே இருக்கின்றன.

ஒரு நகம் முழுதாக வளர்வதற்கு நான்கிலிருந்து எட்டு மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். கால் விரல் நகங்களைவிட கை விரல் நகங்கள் வேகமாக வளரும்.  கோடை காலத்தில் அதிக அளவில் வளரும். கைவிரலில் ஒரு நகம் மாதத்துக்கு சுமார் மூன்று மில்லி மீட்டரும், கால் விரல் நகம் மாதத்துக்கு ஒரு மில்லி மீட்டர் வரையிலும் வளரும். தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருப்பது, சத்துக்குறைபாடு, சில வகை மருந்துகளைத் தொடர்ந்து சாப்பி டுவது, வயதாவது போன்ற காரணங்களால் நகத்தின் வளர்ச்சி குறையலாம். நகத்தின் வேலை எது என்று பார்த்தோமானால், நாம் அதிகமாக பயன்படுத்துகிற விரலின் முனைகளைப் பாதுகாப்பது என்று சொல்லலாம். 

நகம் - நோய் காட்டும் கண்ணாடி!

‘அடுத்தது காட்டும் பளிங்குபோல கெடுத்தது காட்டும் நகம்’ என்று சொல்லும் அளவுக்கு நகம் ஒரு நோய் காட்டும் கண்ணாடி. ரத்தசோகை, மஞ்சள் காமாலை, இதயக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், பூஞ்சை நோய் என்று 50க்கும் அதிக நோய்களை இது நமக்குக் காட்டிக்கொடுத்து விடும். அந்த நோய்களில் முக்கியமானவற்றை இங்கே தெரிந்துகொள்வோம்.

வேதனைப்படுத்தும் நகச்சுத்தி

நகத்தின் மீது ஏதாவது விழுந்துவிட்டாலோ, அடிபட்டாலோ ரத்தம் கட்டி விண்ணென்று வலிக்கும். அப்போது நகத்தின் அடியில் கட்டிக்கொண்டிருக்கும் ரத்தத்தை நீக்கினால்தான் வலி குறையும்... ரத்தக்கட்டு குணமாகும். சில பேர் ‘நகத்தை வெட்டுகிறேன்’ என்று நகத்தை ஒட்ட வெட்டிவிடுவார்கள். இன்னும் சிலர் நகத்தை கரும்பைக் கடிப்பதைப்போல் கடித்துத் துப்பிக் கொண்டிருப்பார்கள். இப்படிச் செய்வதால், நகத்தில் பாக்டீரியா கிருமிகள் நுழைந்து புண்ணாகிவிடும்.

இதுதான் நகச்சுத்தி (Paronychia). இப்படி நகத்துக்குத் தானாக வரும் நோய்களும் உள்ளன. நாமாக வரவழைத்துக் கொள்ளும் நோய்களும் உள்ளன. இவை குறித்துப் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால் நகம் தரும் வேதனைகள் அதிகம். நகத்தை பிளேடால் வெட்டாமல், விரலால் பிய்க்காமல், நக வெட்டியால் வெட்டினாலே நகத்துக்கு வரும் பல ஆபத்துகளை தவிர்த்து விடலாம்.

நலம் கெடுக்கும் நகச் சொத்தைஅழகு உறுப்பாக நாம் கருதும் நகத்தின் அழகைக் கெடுப்பதற்கென்றே ஒரு நோய் உள்ளது. அதுதான் நகப்படை அல்லது நகச் சொத்தை (Fungal Nail). டிரைக்கோபைட்டன் ரூப்ரம் (Trichophyton rubrum) எனும் பூஞ்சைக் கிருமிகளால் ஏற்படுகின்ற இந்த நோய் கை விரல்களைவிட கால் கட்டை விரல்களையே அதிகமாக பாதிக்கும். 

சமையல் வேலை, வீட்டுவேலை, பாத்திரம் கழுவுவது போன்ற வேலை செய்கிறவர்கள் தண்ணீரில் அதிக நேரம் விரல்களைப் புழங்குவார்கள். அப்போது அவர்களுக்கு பூஞ்சைக்கிருமிகள் தொற்றிக்கொள்ள அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத் தடுக்க இவர்கள் வேலை முடிந்ததும் கைகளை கழுவிச் சுத்தமான துணியால் ஈரத்தைத் துடைத்து, விரல்களை  உலர வைத்த பிறகுதான் அடுத்த வேலையில் ஈடுபடவேண்டும்.

இது வந்துள்ளவர்களுக்கு நகம் பால் போல வெளுத்துக் காணப்படும். சிலருக்கு நகம் மஞ்சள் நிறத்தில் கோடு கோடாகத் தெரியும். நகம் தடித்து கரடு முரடாகத் தெரியும். போகப்போக நகம் பிளவு பட்டு உடைந்துவிடும். இறுதியில் அது தானாகவே விழுந்துவிடும். நகச் சொத்தை ஏற்பட்டவர்களுக்குக் காலில் ஷூ அணிந்தால் கட்டை விரல் வலிக்கும். ஓட முடியாது. வேகமாக நடக்க முடியாது.

சிகிச்சை என்ன?

இதற்கு சிகிச்சை அளிப்பது அவ்வளவு சுலபமல்ல. இந்தப் பூஞ்சைக் கிருமிகளைக் கொல்வதற்கென்றே மாத்திரை மருந்துகளும் வெளிப்பூச்சுக் களிம்புகளும் நிறைய உள்ளன. ஆனால், இவற்றுக்கெல்லாம் அசைந்து கொடுப்பதில்லை, நகச்சொத்தை.  மிகவும் பொறுமையாக, பல மாதங்களுக்குத் தொடர்ந்து இந்தச் சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறவர்களுக்கு மட்டுமே ஓரளவுக்கு நோய் குணமாகும். எனவே, இதற்கு நோய்த்தடுப்புதான் சிறந்த வழி!

குழி விழுந்த நகம் சொல்வது என்ன?

சிலருக்கு கைவிரல் நகங்கள் மிகவும் வெள்ளையாக ஸ்பூன் போல குழி விழுந்து (Koilonychia) காணப்படும். ஒருவருக்கு இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை ஏற்படுமானால் இம்மாதிரியான நகங்கள் காணப்படும். அதேவேளையில், கைக்குழந்தைகளுக்கும் சிறு குழந்தை
களுக்கும் கால் விரல்களில் இம்மாதிரியான குழி விழுந்த நகங்கள் சில மாதங்களுக்குக் காணப்படும். இது நோயின் அறிகுறி அல்ல. இவர்களுக்கு இந்த மாதிரியான நகங்கள் தானாகவே சரியாகிவிடும். எனவே, பயப்பட வேண்டாம்.

கிளிமூக்கு நகம் தெரியுமா?

சிலருக்கு கைவிரல் நகங்கள் கிளிமூக்கு போல வீங்கிக்கொள்ளும். இதை ‘கிளப்பிங் நெய்ல்ஸ்’  (Clubbing nails) என்று சொல்வார்கள். இது நமக்கு ஒரு எச்சரிக்கை மணி போன்றது. காரணம், இது உடலில் மறைந்திருக்கிற எட்டு நோய்களை வெளிக்காட்டுகின்ற ஒரு முக்கியமான அறிகுறி. இதயக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், குடல் நோய், சிரோசிஸ் எனும் கல்லீரல் நோய், பிறவிக் கோளாறுகள், இதயஉறை அழற்சி நோய், புற்றுநோய், செரிமானக் கோளாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்று உடலில் ஏற்பட்டிருந்தால் நகங்கள் கிளிமூக்கு போல வீங்கிக்கொள்ளும். இதை உடனே கவனித்து நோயைக் கண்டுபிடித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால் நகம் நார்மலாகிவிடும். புகைப் பழக்கம் உள்ளவர்களிடம் இந்த வகை நகம் அதிகம் காணப்படும்.

நிறம் மாறும் நகங்கள்!

நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் காணப்பட்டால் அந்த நகத்துக்கு ‘டெர்ரி நெல்’ (Terry nails) என்று பெயர். இது சிரோசிஸ் எனும் கல்லீரல் நோய், இதயச்செயலிழப்பு நோய் போன்றவற்றின் அறிகுறியாகும். பெரியவர்களுக்கு ஏற்படுகின்ற டைப் 2 நீரிழிவு நோயின் ஆரம்பகட்டத்தில் இந்த வகை நகம் சிலருக்குக் காணப்படுவது உண்டு.    

நகத்தின் பிறை எனப்படும் லுனுலாவில் சிவப்புப்புள்ளிகள் காணப்படுமானால், அது சோரியாசிஸ் எனும் சரும நோயின் அறிகுறி. கல்லீரல் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் போதும் இந்த வகை நிறமாற்றம் நகங்களில் ஏற்படுவது வழக்கம். முக்கியமாக, கட்டைவிரல் நகத்தில் இது காணப்படுவது அதிகம்.நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலோ, வெள்ளையாகவோ இருந்து, கீழ்ப்பகுதி மாநிறத்தில் இருக்குமானால் அது சிறுநீரக நோய் இருப்பதை வெளிக்காட்டுகிற அறிகுறி.

நகம் நீல நிறத்துக்கு மாறியிருந்தால், அது ரத்த ஓட்டம் சரியில்லை என்பதைக் காட்டுகிற அறிகுறி. பொதுவாக குழந்தைகளுக்கு இதயத்தில் பிரச்னை இருந்தால், இம்மாதிரியான நிற மாற்றங்கள் நகத்தில் தோன்றும்.நகம் முழுவதுமே மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அது மஞ்சள்காமாலைக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். அல்லது நுரையீரல் நோய், நிணநீர்த்தேக்க நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். நத்தைக்கூடு போன்ற நகம் இருந்தால் அது ‘பிராங்கியக்டேசிஸ்’ எனும் நுரையீரல் நோய் இருப்பதைக் காட்டுகின்ற அறிகுறி. 

நகத்தின் அடிப்பாகத்தில் எண்ணெய் விட்டதுபோல் காணப்படுமானால், அதற்கு ‘ஆயில் ட்ராம் சிண்ட்ரோம்’ என்று பெயர். இதுவும் சோரியாசிஸ் நோயின் ஆரம்ப அறிகுறி. நகத்தில் புள்ளி புள்ளியாக குழிகள் விழுமானால் அதுவும்  சோரியாசிஸ் நோயின் அறிகுறிதான்.இரட்டை நகம்!   சில நேரங்களில் நகங்கள் இரண்டாகத் தெரியும். காரணம், ‘க்யூட்டிக்கிள்’ எனும் மேல் தோல் நகத்தின் மேலேயே வளர்ந்துவிடும். இதற்கு ‘டெரிஜியம்’ (Pterygium) என்று பெயர். 

ஆபத்தான கறுப்பு நகம்! நகத்தில் கறுப்புக்கோடுகள் காணப்பட்டால், ரத்தக்கட்டு என்றோ, மச்சம் என்றோ நினைத்து கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. இது ‘சப்உங்குவல் மெலனோமா’ (Subungual melanoma) என்ற அரியவகை புற்றுநோயாக இருக்கலாம். இது ஒரு மோசமான புற்றுநோய் வகை. இது வந்துவிட்டால் நோயாளியின் ஆயுள்காலம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே என்பது அதிர்ச்சியூட்டும் செய்தி.
சத்துகள் குறைந்தால்?

உடலில் கால்சியம், வைட்டமின், புரதம், இரும்புச்சத்து போன்ற சத்துகள் குறைந்தாலும் நகத்தின் குறுக்கே அழுத்தமான வெள்ளைக்கோடுகளோ, வெள்ளைப் புள்ளிகளோ தோன்றுவதுண்டு. ஆர்சனிக் நச்சு உடலில் இருந்தாலும் நகத்தில் வெள்ளைக்கோடுகள் காணப்படும். சரும நோய் மருத்துவரை ஆலோசித்து நோய் அறிந்து சிகிச்சை பெற்றால் இந்தமாதிரியான கோடுகள் மறைந்துவிடும்.

உள்நோக்கி வளரும் நகம்சிலருக்கு நகம் உள்நோக்கி (Ingrown nails) வளர்வதுண்டு. முக்கியமாக, கால் விரல் நகங்கள் இந்த மாதிரி வளர்வது வழக்கம். இதில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டு வலியும் வீக்கமும் உண்டாகும். இது பிறவியிலேயே ஏற்படுவது. தகுந்த காலணிகளை அணிவதும் பொருத்தமான ஷூக்களை அணி்வதும் பிரச்னையைப் பெரிதாக்காமல் பாதுகாக்கும்.நகங்களைப் பாதுகாக்க என்ன செய்வது?

*அடிக்கடி விரல்களை சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். 

*கை, கால்களைக் கழுவியதும் ஈரம் போகத் துடைத்துவிடுங்கள்.

*நகம் கடிக்காதீர்கள். அப்படிக் கடித்தால், வாயில் இருக்கும் கிருமிகள் நகத்துக்கும், நகத்தில் இருக்கும் கிருமிகள் வாய்க்கும் சென்றுவிடும். இதனால் குடல் புழு முதல் டைபாய்டு வரை பல நோய்த்தொற்றுகள் ஏற்படும். 

*குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

*வேதிப்பொருட்களின் பயன்பாட்டால் நகங்கள் உடையும். இதைத் தவிர்க்க கைகளில் தகுந்த பாதுகாப்பு உறைகளை அணிந்துகொள்ள வேண்டும்.

*அடிக்கடி நகத்துக்கு பாலிஷ் போடாதீர்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆசைக்குப் போட்டுக்கொள்ளலாம். 

*அடிக்கடி பாலிஷ் போட்டுக்கொள்பவர்கள் பாலிஷை அகற்றுவதற்கு பாலிஷ் ரிமூவரை பயன்படுத்துவார்கள். நகப்பாலிஷைவிட பாலிஷ் ரிமூவர்தான் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இதில் கவனம் தேவை!

*தலைமுடிக்குச் சாயங்களைப் பயன்படுத்தும்போது தரமான சாயத்தைப் பயன்படுத்த வேண்டும். காரணம், தரம் குறைந்த முடிச்சாயங்களில் ‘பாராபினைலின் டையமின்’ (Paraphenylene diamine) எனும் வேதிப்பொருள் உள்ளது. இது நக இடுக்குகளில் படியுமானால் புற்றுநோய் உருவாகிற வாய்ப்பு உண்டு. 

*நகம் வறண்டு போயிருந்தால் பாலிஷுக்கு பதிலாக மாய்ச்சுரைசரை பயன்படுத்தலாம்.

*போட்டா பிரின்ட் ரசாயனத்தில் வேலை செய்கிறவர்கள், தடயவியல் துறையில் வேலை செய்கிறவர்கள் போன்றோரின் நகங்கள் பழுப்பு நிறத்துக்கு மாற வாய்ப்புண்டு. இவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சரும நோய் நிபுணரிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது.

*ஆட்டோமொபைல் மெக்கானிக்குகள், கார்பன் கரித்தூள் வேலை, பெட்ரோலியம் மற்றும் டீசல் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கையுறை அணிந்து வேலை செய்ய வேண்டியது அவசியம். அதிலும் துணியால் செய்த கையுறையை உள்பக்கத்திலும், அதன் மேலே ரப்பர் கையுறைகளையும் அணிந்துகொண்டால் மிகவும் நல்லது.

*பாட்டில் மூடி போன்றவற்றைத் திறப்பதற்கு நகங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

*காலுக்குச் சரியான அளவில் உள்ள  பொருத்தமான ஷூக்களை அணி்ய வேண்டியது முக்கியம். 

*நகங்களை அதிக நீளத்தில் வளர்க்க ஆசைப்படாதீர்கள். அப்படி வளர்க்கும்போது அடிக்கடி அதில் காயம் ஏற்பட வாய்ப்புண்டாகும். அது நகத்தின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.

*நகத்தின் அளவிலோ, நிறத்திலோ திடீர் மாற்றம் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் காண்பித்து ஆலோசித்துக்கொள்ளுங்கள். 

*பால், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன், முழு தானியங்கள், காய்கறி, கீரைகள், கொட்டைகள், பயறுகள் போன்ற உணவுகளை அதிமாக சேர்த்துக்கொண்டால் நகம் ஆரோக்கியமாக வளரும்.நகங்களை வெட்டும்போது கவனம்!

விரல் நகங்களைக் கடிக்காதீர்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நகங்களைக் கவனமாக வெட்டுங்கள். முக்கியமாக, பிளேடால் அல்லது கத்திரிக்கோலால் நகங்களை வெட்டாதீர்கள். நகவெட்டியால் வெட்டுங்கள். நகங்களை ஒட்ட வெட்டாதீர்கள். முக்கியமாக, ஓரங்களில் உள்ள நகங்களை வெட்டும்போது அதிக கவனம் தேவை.

குளித்து முடித்ததும் நகங்களை வெட்டுவது நல்லது. பொதுவாக, கால் விரல் நகங்களை வெட்டுவதற்குக் கடினமாக இருக்கும். அப்போது உப்புத்தண்ணீரில்  அதாவது, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சமையல் உப்பைக் கரைத்துக்கொண்டு, அந்தத் தண்ணீரில் கால் விரல்களை சுமார் பத்து நிமிடங்களுக்கு ஊற வைத்தபின் நகம் வெட்டினால் எளிதாக இருக்கும்.நகம் வெட்டும் கருவியையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

நகத்தில் கறுப்புக்கோடுகள் காணப்பட்டால், அது ‘சப்உங்குவல் மெலனோமா’ என்ற அரிய வகை புற்றுநோயாக இருக்கலாம். இது ஒரு மோசமான புற்றுநோய் வகை. இது வந்துவிட்டால் நோயாளியின் ஆயுள்காலம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே...



பலர் முகத்தை அழகாக்கிக் கொள்வதில் நிறைய கவனம் செலுத்துவார்கள். ஆனால் நகங்களை கவனிக்காமலே விட்டுவிடுவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல, உடல்நிலையை நாம் நகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஏன் எனில் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. உடலில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பிற்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை நகம் காட்டுகிறது. ஏதேனும் ஒரு உடல் உபாதைக்காக நாம் மருத்துவரிடம் செல்லும் போது, சிலர் நம் கை விரல்களை பரிசோதிப்பார்கள். ஏனெனில் அவர்கள் சந்தேகிக்கும் நோய் நமக்கு ஏற்பட்டிருப்பின் அதற்கான ஆதாரம் நகங்களில் தெரிகிறதா என்பதை அறிந்து கொள்ளத்தான். 

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களது நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதே இதற்கு முதல் உதாரணம். அதுபோல தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு, அதனால் ஏற்படும் பாதிப்பை பழுப்பு நிற நகங்கள் வெளிப்படுத்துகின்றன.

உடல்நிலையில் ஏற்படும் சில தற்காலிக பாதிப்புகளினால், நகங்களின் வளர்ச்சியில் கூட மாற்றங்களை ஏற்படுத்தும்.

நகங்களை சுத்தமாகவும், சரியான அளவில் வெட்டி விடுவதும் ஒவ்வொருவரும் நமது உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் செயலாகும். 

ஒருவரது உடலில் இரும்புச் சத்துக் குறைவாக இருப்பின், நகங்கள் உடைவது அல்லது பட்டையாக விரிந்து வளர்வதன் மூலம் அறியலாம். சிலருக்கு நகங்களில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டிருக்கும். இதுவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டையே காட்டுகிறது.


நகம் கடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கலாம். எப்போதாவது மனக்கவலை ஏற்படும் போது நகம் கடிப்பது ஒரு சிலர். ஆனால் எப்போதும் நகத்தை தேடித் தேடி கடிப்பது சிலருக்கு பழக்கமாகவே இருக்கிறது. அவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் இருப்பது கூட நரம்பு சம்பந்தமான பிரச்சினையாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

தன்னம்பிக்கை குறைவாக இருப்பவர்கள் பெரும்பாலும் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு நகம் வளர்வதே இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. வேலை செய்யும் போது நகம் தேய்ந்து அதன் வளர்ச்சி நம் கண்களுக்குத் தெரியாமலேயேப் போய்விடுகிறது.

மருதாணி இலைகளை அரைத்து வைக்கப்படும் மருதாணி விரல் நகங்களுக்கு நல்ல பயனை அளிக்கிறது. அதனை முடிந்தால் செய்து வரலாம்.

சிலர் அடிக்கடி நகப்பூச்சை பயன்படுத்துவார்கள். இது மிகவும் தவறு. மாதத்தில் ஓரிரு நாட்களாவது நகங்கள் காற்றோட்டத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் உண்மையான தன்மையை நாம் அறிய முடியும்.

மேலும், நகங்கள் காய்ந்து வறண்ட தன்மையுடன் இருந்தால் அதற்காக நல்ல மாய்ச்சுரைஸர் க்ரீம்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

சிலருக்கு நகங்களே வளராமல் குட்டையாகவே இருக்கும். இதுபோன்றவர்கள் கை விரல்களுக்கு மசாஜ் அளித்து வந்தால், விரைவில் நகங்களில் வளர்ச்சி ஏற்படும். அழகு நிலையங்களுக்குச் சென்று பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். இதுவும் விரல் நகங்களுக்கு நன்மை அளிக்கும்.

கைவிரல் நகங்கள் லேயர் லேயராக உடைவதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு வீட்டில் தூய்மைப்படுத்துவதற்காக பயன்படுத்தும் சோப்புத் தன்மையால் ஏற்படும் ஒவ்வாமையாகக் கூட இருக்கலாம். லேயர்கள் பிரிவதில் கூட சில வித்தியாசங்கள் உண்டு. சிலவை நீள வாக்கில் பிரியும். சிலருக்கு குறுக்காக பிரியும். நகத்தில் உள்ள நகத்தட்டுகளுக்குத் தேவையான நீர்த்தன்மை இல்லாமல் போவதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். 

நகச்சொத்தை ஏற்பட, நகத்தில் முன்பு எப்போதாவது ஏற்பட்ட காயம் காரணமாக இருக்கலாம். விரலில் அடிபடுவது, இடுக்கில் கைவிரல் சிக்கிக் கொள்வது போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பால் நகப்படுக்கையில் ஏற்படும் ரத்தக் கசிவானது, நகத் தட்டுக்கு அடியில் தங்கிவிடும். இதனால் நகச் சொத்தை ஏற்படுகிறது. இந்த நகச்சொத்தை தானாக சரியாகவும் வாய்ப்புள்ளது. ஆனால் நகச்சொத்தை தீவிரமடைந்து, நகப் பகுதியில் வலி ஏற்படுமாயின், நகத்தை பிடுங்கிவிட்டு அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும். 

கை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இதில் வெள்ளை நிறம் ரத்த சோகையையும், மஞ்சள் காமாலையையும் குறிக்கும். விரல் நகங்களுக்கு நடுவில் சொத்தை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிவது நல்லது.

கைப்புண்ணிற்கு கண்ணாடித் தேவையா என்பது பழமொழி. ஆனால் நம் கை விரல் நகங்களைக் கொண்டே நமது உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் வகையில் மனித உடல் அமையப்பட்டுள்ளதை எண்ணிப்பாருங்கள்.

சங்ககாலத்தில் மங்கையரின் நீல நயனங்களின் அழகில் மயங்கிய கவிஞர்களின் கவனம் முழுவதும் தற்பொழுது நீண்ட நகங்களின் மீது திரும்பியுள்ளது. நகங்களுக்கு மருதாணி பூசி சிவப்பாக்கி அழகு பார்த்த காலம் மலையேறி இன்று கைவிரல்களில் குட்டிக்கலைக் கூடங்கள் உருவாகின்றன.

வண்ண வண்ண நகப்பூச்சுக்களின் பயன்பாடு 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வர்த்தக ரீதியில் அறிமுகமாகியபொழுது பெண்களின் அழகியல் கலையில் புதுப்பரிமாணம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் தாம் உடுத்தும் ஆடைகளுக்குப் பொருத்தமான வர்ணத்தில் நகங்களுக்குப்; பொலிஷ் செய்து கொண்டவர்கள் கறுப்பு, நீலம், பச்சை என்று மரபு சாரா வர்ணங்களைத் தெரிவு செய்யத் தொடங்கினர். இன்று ஒருபடி மேலே சென்று தமது நீண்ட விரல்களைக் கலைக்கூடமாக்கி அதிலே தமது கை வண்ணத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளார்கள். 'நெயில் ஆர்ட்" என்று அழைக்கப்படும் விரல் நகங்களில் வண்ணக் கோலமிடும் இந்தக் கலையை செய்து கொள்வதில் ஆர்வம் காட்டாத இளம்பெண்களே இல்லை எனலாம்.

வனிதையரின் அழகிய வதனத்துக்கு ஒப்பாக கைவிரல்களின் ஆரோக்கியத்தையும் அழகையும் பேணுவதற்காக 'மெனிக்குயர்" நுட்பம் அறிமுகமாகியது. இந்த நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட ஓரங்கமாக 'நெயில் ஆர்ட்" விளங்குகின்றது. ஃபிரெஞ்ச் மெனிக்குயர் செய்கையில் அழகாக சீராக்கப்பட்ட நகங்களுக்கு மெல்லிய நிறங்களில் பொலிஷ் செய்துவிட்டு நுனியில் வெள்ளை நிறத்தில் தடிப்பான கோடு மட்டும் வரையப்படுகின்றது. அதனை மேலும் பலவிதமாக அழகுபடுத்தும்பொழுது அதுவே நெயில் ஆர்ட்டாக மாறுகின்றது.

எளிமையான நெயில் ஆர்ட் வடிவங்களை வீட்டிலேயே நீங்கள் செய்து கொள்ளலாம். முதலில் உராய்வு சாதனத்தைப் பயன்படுத்தி நகங்களை சீராக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் நகங்களுக்கு முதல் பூச்சாக 'பேஸ் கோட்" எனப்படும் நிறமற்ற நெயில் பொலிஷ் பூச வேண்டும். அதன் மேல் விரும்பிய வர்ணத்தில் நெயில் பொலிஷ் பூசி அது காய்ந்ததும் அதன் மேல் கன்ட்ராஸ்ட் வர்ண நெயில் பொலிஷால் 'ஆர்ட் டெகோ" தூரிகைகள், 'டூத் பிக்" போன்றவற்றைப் பயன்படுத்தி குட்டிக் குட்டி டிசைன்களை வரைந்து கொள்ளலாம். இறுதியில் 'டொப் கோட்" பூசிவிட்டால் எளிமையான நெயில் ஆர்ட் செய்து முடிந்தாயிற்று. அழகு நிலையங்களுக்குச் சென்று செய்யும்பொழுது நேர்த்தியான நெயில் ஆர்ட் கிடைக்கின்றது.

'18கரட் கோல்ட் டொப் கோட்"- புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த 18 கரட் தங்கத்தைக் கொண்ட ஃபாஷன். அனைத்து நெயில் பொலிஷ் மீதும் பூசலாம்.கண்ணைக் கவரும் பளபளப்பான நகங்கள் கிடைக்கின்றன.

பொதுவாக மணப்பெண்கள், விருந்து வைபவங்கள் மற்றும் விசேட நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் நெயில் ஆர்ட் செய்து கொள்ளத் தவறுவதில்லை. இவர்களின் முதல் தெரிவாக இருப்பது '3டி" ஸ்டைல் நெயில் ஆர்ட். மிகவும் நுண்ணிய, கண்ணைக் கவரும் அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டவை இவை.


மிகவும் இலகுவான ஃபிரெஞ்ச் மெனிக்குயர் செய்துவிட்டு அதன் மேல் புள்ளிகள், கோடுகள் வரைவதை அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களும் கல்லூரிப் பெண்களும் விரும்புகின்றனர். இவை கவர்ச்சியாக அமைவதுடன் பராமரிப்பதற்கும் இலகுவாக இருக்கும். விசேட நிகழ்வுகளுக்குச் செல்லும்பொழுது இதற்கு ஒரு படிமேலாகச் சென்று கற்கள், மணிகள், முத்துக்கள் பதித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். தற்காலத்தில் ஒரு தொழில்சார் கலையாக வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் கலையில் பலவித நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன.


'ஃப்றீ ஸ்டைல்" நெயில் ஆர்ட் 
பல வர்ண நெயில் பொலிஷ்களைக் கொண்டு புள்ளிகள், வளைகோடுகள், மலர்கள், கொடி அலங்காரம் போன்ற இலகுவான வடிவங்களை வரைவது ஃபிறீ ஸ்டைல் நெயில் ஆர்ட் எனப்படுகின்றது. ஓவியம் வரைவதில் ஆர்வம் இருப்பவர்களுக்குக் கச்சிதமாக கைவரக்கூடிய நுட்பம் இது.

'எயார் பிறஷ்" டிசைன்
இன்னொரு முறையாக நகங்கள் மீது ஸ்டென்சிலை வைத்து அதன் மேல் எயார் பிறஷ் கொண்டு வர்ணம் பூசி பல டிசைன்களைப் பெறமுடியும். இதயம், மலர்கள், பறவைகள், 'லெபர்ட் டிசைன்", ஆண், பெண் முகங்கள் முதலிய ஓவியங்களை நகங்களில் பெற்றுக் கொள்வதற்கு எயார் பிரஷ் முறை சிறந்தது. செயற்கையாகப் பொருத்திய நகங்களும் இந்த டிசைனை செய்து கொள்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.


'3டி ஸ்டைல்" நெயில் ஆர்ட்
ஃபிரெஞ்ச் மெனிக்குயர் அல்லது நெயில் ஆர்ட் செய்யப்பட்ட நகங்கள் மீது அக்ரிலிக் பசையைக் கொண்டு மலர்கள், கொடி அலங்காரம் முதலானவற்றை செய்து கொள்ளலாம். இதற்கெனத் தயாரிக்கப்பட்ட குட்டிப் பூக்கள், இலைகள் முதலியவற்றை ஒட்டிக் கொள்வதும் 3டி ஸ்டைல் ஆகும். கற்கள், பல வர்ண மணிகள், சில்வர் டஸ்ட் முதலியவற்றைப் பயன்படுத்தும்பொழுது மிகவும் ஆடம்பரமான அழகு கிடைக்கின்றது.


ஸ்டாம்ப் நெயில் ஆர்ட் 
நெயில் பொலிஷ் பூசப்பட்ட நகங்கள் மீது சாதாரண அச்சுப் பதிக்கும் முறையைப் பயன்படுத்தி ஓவிய முத்திரைகளைப் பதித்துக் கொள்வதை ஸ்டாம் ஆர்ட் என்கின்றோம். மற்றவரின் உதவியின்றி நீங்களேயே இந்த ஆர்ட்டை செய்து கொள்ளலாம். இதற்குத் தேவை பல வண்ண நெயில் பொலிஷ், விரும்பிய ஓவியங்களின் அச்சு மற்றும் அதற்கான ஸ்டாம்ப் ஆகியவை மட்டுமே.


ஸ்டிக்கர் டிசைன் 
பல வடிவங்கள் கொண்ட நெயில் ஆர்ட் ஸ்டிக்கர்களைக் கடையில் பெற்றுக் கொள்ளலாம். திடீரென விருந்து வைபவங்களுக்கு அழைப்பு வந்தால் உடனும் உங்கள் கைவிரல்களின் அழகை மெருகுபடுத்துவதற்குக் கைகொடுக்கக்கூடியவை இந்த நெயில் ஸ்டிக்கர்ஸ். முற்கூட்டியே இவற்றை வாங்கி வைத்திருந்தால் இரண்டே நிமிடத்தில் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு தயாராகிவிடலாம். 


அக்ரிலிக் நகங்கள் 
குட்டையான நகங்களைக் கொண்டவர் களுக்கு நீளமான நகம் வேண்டுமானால் அக்ரிலிக் பசையைக் கொண்டு விரும்பிய வடிவில் நகத்தை அமைத்துக் கொள்ளலாம். தற்பொழுது ரெடிமேட் அக்ரிலிக் நகங்கள் தாராளமாகக் கிடைப்பதால் 'நெயில் க்ளு" கொண்டு இலகுவாகப் பொருத்திக் கொள்கின்றனர். இந்த நகங்கள் மீது நெயில் ஆர்ட் செய்து கொள்வது அதிக கவர்ச்சியை வழங்குகின்றது. 

'ஸ்கை ஃபோல் மக்னடிக் லக்கர்"- சந்தைக்குப் புதுவரவான இந்த நுட்பத்தில் இரண்டு கோட் மக்னடிக் லக்கர் பூசிய விரல் நகத்தை காந்தக் கருவியின் கீழ் சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இதன்போது காந்தப் புலத்தின் செயற்பாட்டினால் நகப்பூச்சில் வடிவங்கள் உருவாகும். நிரந்தரமான தன்மையைக் கொண்ட இந்த நெயில் ஆர்ட், நகங்களுக்குப் புதுமையான தோற்றத்தைத் தருகின்றது.

ஜெல் நெயில் 
நெயில் ஆர்ட் செய்வதற்கு விசேடமான நெயில் பொலிஷ் பயன்படுத்துகின்றார்கள். ஏனெனில், சாதாரண நெயில் பொலிஷ் மீது ஓவியங்கள் வரைவதோ அலங்கார வேலைப்பாடுகள் செய்வதோ கடினமானது. தற்பொழுது அறிமுகமாகியிருக்கும் ஜெல் நெயில் பொலிஷ் நிரந்தரமானது. இங்கு ஜெல் பூசிய நகங்களை 'யு.வி" லைட் எனப்படும் ஊதாக்கதிர்களின் கீழ் வைக்கின்றார்கள். பளபளப்பான கண்ணைக் கவரும் தோற்றத்தை உங்கள் கைவிரல் நகங்கள் பெற்றுக் கொள்கின்றன.

நாம் அணியும் ஆடை அணிகலன்களின் வடிவமைப்பு காலத்துக்குக் காலம் மாறுவது போன்று நெயில் ஆர்ட் வடிவங்களும் புதிது புதிதாக அறிமுகமாகின்றன. பெண்களின் அழகுப் பராமரிப்பு தொடர்ச்சியாக வளர்ச்சி யடைந்து வருவதுடன் அழகை ஆராதிக்கும் மங்கையர்களின் தோற்றத்திற்கு அணிசேர்க்கும் தனித்துவ அங்கமாக நெயில் ஆர்ட் மாறியுள்ளது. சர்வதேச தரத்தில், பாதுகாப்பாக இவற்றை மேற்கொள்வதற்குப் பல நிலையங்கள் தலைநகரில் இயங்குகின்றன. அகத்தின் அழகு முகத்தில் மட்டுமன்றி நீங்கள் செய்யும் நக அலங்காரத்திலும் மிளிர்வதைக் கண்டு வியக்காதவர்கள் இருக்க முடியாது!.

இந்த ஆக்கத்திற்கு வேண்டிய தகவல்களை 'பிரிட்டிஷ் காஸ்மட்டிக்ஸ் - ஒ.பி.ஐ நெயில் ஸ்டூடியோ" மற்றும் 'த நெயில் பார்" ஆகிய நிறுவனத்தினர் தந்துதவியிருந்தனர்.

No comments:

Post a Comment