Monday, 3 September 2018

மனைவியிடம் கோபிக்காதீர்கள்

நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும்பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும். மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.



ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துயரம் வந்து சேரும். நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன் எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.


இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக் காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும் மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று பெருந்துயரத்தைச் செய்யும். தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல் நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி விடுவான்எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர் போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.


எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை. மரம் தனக்காகப் பழுப்பதில்லை. ஆறு தனக்காக ஓடுவதில்லை. காற்று தனக்காக வீசுவதில்லை. அது போல் ஞானிகளும் தமக்காக ஒரு போதும் வாழாமல் பிறர்நன்மைக்காகவே வாழ்கிறார்கள்.

* மலரைச் சுற்றி மணம் கமழ்வதைப் போல, நாம் செய்யும் நல்ல செயல்களைச் சுற்றி புகழ் என்னும் மணம் கமழ்ந்து கொண்டேயிருக்கும்.
* கோபம் அறவே இல்லாதவனிடம் தர்மதேவதை பணிவுடன் வீற்றிருப்பாள். அவன் நல்வாழ்வு பெற்று வாழ முழுமையாக அருள்புரிவாள்.
* நாம் அனுபவிக்கும் சுகமோ, பாவமோ அனைத்திற்கும் மூல காரணம் நம் வினைப்பயன்களே. புண்ணியமும், பாவமும் நாம் செய்த வினைகளால் உண்டாகின்றன.
* செடி கொடிகள் வேர் மூலமாகத் தண்ணீரைப் பெற்று வளர்வது போல, கடவுளும் ஏழைகளின் மூலமாகவே உணவினை ஏற்று மகிழ்கிறார்.
* மனம் ஒரு நல்ல சேவகன். அதே சமயத்தில் கெட்ட முதலாளி. மனம் உனக்கு அடிமையானால், அது உனக்கு சேவகனாய் பணி செய்யும். மனம் உனக்கு முதலாளியானால் ஆட்டிப் படைக்கும்.

கிருபானந்த வாரியார் சுவாமிகள்


No comments:

Post a Comment