நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான். அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது. அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் <உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும். இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும், என்றார். இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி. கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது. இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும். மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.
மூன்று மூன்றாக பிரித்தது ஏன்?
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம். இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம். பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி. ஆக, காரண காரியங்க ளுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.
புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.
வருடம்தோறும் புரட்டாசிமாதத்தில் கொண்டாடப்படும் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும்.
நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர், மகிஷாசுரனை தேவியானவள் 9நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாளே விஜயதசமியாக கொண்டாடபடுகிறது.
அரக்கன் மகிஷா சுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்ற நாளே விஜயதசமியாகும்
விஜய் – என்றால் வெற்றி; தசமி என்றால் – பத்து (தசம் = பத்து). இதனையே விஜய தசமி என கொண்டாடுகிறோம். எனவே 9நாட்களும் விரத மிருந்து வழிபடுவோர், 10ம் நாள் அன்னையின் வெற்றியை கொண்டாடி விரதத்தை முடித்துகொள்வதை வழக்கமாக கொண்டிருகிறார்கள்.
வட மாநிலங்களின் முக்கியநகரங்களில் துர்கா பூஜையாகவும் விஜய தசமி அழைக்கபடுகிறது. தேவியின் வெற்றியைகொண்டாடும் விதமாக அன்னையை பிரமாண்டமாக அலங்கரித்து ஊர்வலமாக கொண்டுசெல்லும் வழக்கம் இன்றளவும் இருந்துவருகிறது.
எனவே விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள் என பொருள்படும்.
குழந்தைகளுக்கு விஜய தசமி அன்று ஆரம்பக்கல்வியை ஆரம்பித்து வைப்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலும் விஜய தசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றிதரும் என்பது ஐதீகம்.
நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:
1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.
3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.
4. நவராத்திரி விழாவை பெரிய அசுரர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.
5. நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
6. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
7. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
8. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
9. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
10. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.
11. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.
12. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.
13. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
14. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.
15. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.
16. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.
17. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.
18. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.
19. புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.
20. நவராத்திரி பூஜைகள் அனைத்தையும் செய்து சுகன்யா தேவி என்பவள் எல்லா வித பலன்களையும் பெற்றாள்.
21. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.
22. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.
23. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
24. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.
25. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.
26. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.
27. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
28. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.
29. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.
30. தென்னகத்தில் இருந்துதான் நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை வங்க நாடு சென்றது.
31. அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.
32. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.
33. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.
34. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.
35. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.
36. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.
37. ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.
38. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.
39. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.
40. குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.
41. கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது.
42. டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் ‘ராம்லீலாÕ நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.
43. சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும்.
44. நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.
45. நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளை பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.
46. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.
47. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.
48. வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.
49. தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
50. சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.
51. அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.
52. காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
53. குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.
54. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.
55. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.
56. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
57. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.
58. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.
59. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.
60. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.
61. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.
62. நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.
63. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
64. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
65. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
66. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.
67. தாராசுரம் ஐராவதேஸ்வரர்கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.
68. கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.
69. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.
70. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.
71. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.
72. ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.
73. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.
74. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
75. எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.
நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.
1. முதலாம் படியில்:- ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகளும்;
2. இரண்டாம் படி:-ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
3. மூன்றாம் படி :- மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
4. நாலாம்படி :-நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
5. ஐந்தாம்படி:-ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
6. ஆறாம்படி:-ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
7. ஏழாம்படி:-மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
8. எட்டாம்படி:-தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி:-பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.
நவராத்திரி வழிபாட்டு முறை.
1. முதலாம் நாள்:- சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.முதல்நாள் நெய்வேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
2. இரண்டாம் நாள்:- இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். இரண்டாம் நாள் நெய்வேத்தியம் :- தயிர்ச்சாதம்.
3. மூன்றாம் நாள்:- மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.மூன்றாம் நாள் நெய்வேத்தியம்:- வெண்பொங்கல்.
4. நான்காம் நாள்:- சக்தித்தாயை அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன். நான்காம் நாள் நெய்வேத்தியம்:- எலுமிச்சை சாதம்.
5. ஐந்தாம் நாள்:- ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்:- புளியோதரை.
6. ஆறாம் நாள்:- அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.ஆறாம் நாள் நெய்வேத்தியம்:- தேங்காய்ச்சாதம்.
7. ஏழாம் நாள்:- ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீ~;ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் அன்னையாகும்.ஏழாம் நாள் நெய்வேத்தியம்:- கற்கண்டுச் சாதம்.
8. எட்டாம் நாள்:- அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.எட்டாம் நாள் நெய்வேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.
9. ஒன்பதாம் நாள்:- அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும். ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்:- அக்கர வடசல், சுண்டல்
No comments:
Post a Comment