Monday, 10 September 2012

சென் கதையின் பிறப்பு

பேரரசர் லியாங் வு டீ அந்த சமயத்தில் சைனாவை ஆண்டு வந்தார். அவர் புத்த தர்மங்களை மதித்து நடப்பவர். புலால் உண்ணாதவர். பல புத்த விகாரங்களை கட்டியவர். தன்னுடைய நாட்டில் புத்த மதம் இருப்பதற்காக தற்பெருமை கொண்டவர்.

போதிதர்மாவின் வருகையைக் கேட்டவர், ஒராண்டிற்கு பிறகு 527 கிபியில் அரச சபையைக் கூட்டி அவருக்கு மரியாதைகள் வழங்கினார். பின்பு அவர்களுக்குள் நடந்த உரையாடலே இன்றைய தினம் ஒரு ஸென் கதை ஆகும்.

மன்னர் "நான் பல புத்த மடங்களையும், கோயில்களையும் கட்டினேன். புத்த சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினனாக சேர்ந்து தொண்டு ஆற்றி வருகிறேன்" என்று கூறியவர், சாதுவிடம் "இவ்வளவு தொண்டுகள் செய்த எனக்கு எவ்வளவு புண்ணியம் சேர்ந்திருக்கும்" என்றுக் கேட்டார்.
"ஒரு புண்ணியமும் சேர்ந்ததாக தெரியவில்லை" என்ற பதிலைக் கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் போதிதர்மர்.

மன்னர் பல சிறந்த ஆசிரியர்களிடமும், மதிக்கக் கூடிய குருக்களிடமும் கற்று அறிந்தவர். "விதை விதைத்தவன் விதை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற சொல்லிற்கு ஏற்ப நல்லது செய்த தனக்கு புண்ணியங்கள் பல சேர்ந்திருக்கும் என்று எண்ணி இருந்தார். ஆனால் இந்த சாதுவின் பதிலைக் கேட்டவர், பேயடித்த மனிதரானார்.
மன்னர் வு சாதுவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்து கொள்ள முடியவில்லை. யார் ஒருவரும் தனக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்றோ, மற்றவர்கள் புகழ வேண்டும், மதிக்க வேண்டும் என்றோ, தன்னுடைய பணபலம், படைபலம் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்றோ எண்ணியவாறு புத்த தர்மங்களை செய்து வந்தால் அதணால் எந்தப் பலனும் சேர்ந்ததாக கூறுவதற்கில்லை என்ற சாதுவின் அர்த்தம் அவருக்கு விளங்கவில்லை.

மன்னர் தன்னுடைய அடுத்தக் கேள்வியைக் கேட்டார். "அப்படி என்றால், புத்த மதத்தின் சாராம்சம் தான் என்ன?"
போதிதர்மா உடனடியாக பதில் அளித்தார். "பரந்த வெற்றிடம், சூன்யம், ஒரு சாராம்சமும் இல்லை!"

பதிலைக் கேட்ட மன்னர் வியப்படைந்தார். "ஒரு சாராம்சமும் இல்லை" என்பதன் முழு அர்த்தத்தையும் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. மற்ற எல்லா ஆசிரியர்களும் "புத்தரின் நான்கு சிறந்த பேருண்மைகள்", "கர்மா", "புத்தரின் விக்கிரகங்கள்", "புத்த சூத்திரங்கள்" முதலியவற்றை
அவருக்கு மிகவும் கடினப் பட்டு விளக்கி புரியவைத்த விஷயங்கள் "ஒரு சாராம்சமும் இல்லை" என்ற பதிலை 28வது புத்த தலைமைக் குருவின் வாயில் இருந்து உதிர்த்ததைக் கேட்டு ஆச்சரியப் பட்டார்.

மன்னர் இறுதியாக தன்னுடைய மற்றொரு கேள்வியைக் கேட்டார். "புத்த மதத்தில் ஒரு சாராம்சமும் இல்லை என்று நீங்கள் கூறினீர்கள், அப்படியானால் யார் என் முன்னால் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது?"
போதிதர்மர் "எனக்குத் தெரியவில்லை"

பேரரசர் பதிலைக் கேட்டு திகைப்புற்று கேள்விகள் கேட்பதை நிறுத்திக் கொண்டார். அவரால் போதிதர்மர் கூறியதன் அர்த்தத்தை கொஞ்சமும் புரிந்து கொள்ள இயலவில்லை.குழப்ப முற்ற மன்னன் சபையினை அதோடு முடித்துக் கொண்டு சாதுவினை அனுப்பி வைத்தான்.

இதுதான் முதன் முதலில் சைனாவில் புத்த மதத்தின் "சான்" வாசனையை அறிந்து கற்றுக் கொண்ட முதல் பாடமாகும். மன்னருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து கிளம்பிச் சென்ற போதிதர்மர் அடுத்த ஒன்பது வருடங்களுக்கு ஒரு கிணற்று சுவரின் முன் அமர்ந்து தியானம் செய்தார். போதிதர்மரின் போதனைக் கதைகளே பிற்காலத்தில் "ஸென்" கதைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.

No comments:

Post a Comment