அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாவார்.
மகாபாரதக் காப்பியத்தின் முக்கியக் கருப்பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீரமரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்குக் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே பலி கொடுத்ததைச் சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது.
தன்னையே பலி கொடுத்ததற்காகக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.
தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்களின் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் பார்ப்பதற்குக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மற்றொரு வரத்தைத் திரௌபதி வழிபாட்டு மரபு மையமாகக் கொண்டுள்ளது. மற்றொரு 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும். அலங்காரம் செய்த அரவானின் தலையே திரௌபதி கோவில்களிலுள்ள பொதுவான கடவுள் உருவமாகும். பெரும்பாலும் இந்தத் தலைகள் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய வகையில் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். சிலநேரங்களில் கோவில் வளாகத்தில் இந்தத் தலைக்கு என்று சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் காவலாகக் கோவில் கூரைகளின் மூலையில் அமைக்கப்பட்டிருக்கும். தன் வெட்டுண்ட தலையின் உருவமாகவே அரவான் வணங்கப்படுகிறார். அவர் தீராத நோய்களைக் குணப்படுத்துவதாகவும் குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தைப்பேறு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.
அரவான் இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறார் (இங்கு அவரது பெயர் Irawan என்று எழுத்துக்கூட்டப்படுகிறது). சாவகப் பகுதியின் முக்கிய தீவுகளில் உள்ள அரவானுக்கென்று தனிப்பட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இவற்றில் நாகருடன் அரவானுக்கு தொடர்பு இல்லை. மேலும் சில சாவக மரபுகளில் அரவானும் கிருஷ்ணரின் மகளாகிய திதிசரியும் திருமணம் செய்துகொள்வதாகவும், தவறாக அடையாளம் காணப்படுவதால் அரவானுக்கு மரணம் நேர்வதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் சாவகத்தின் பாரம்பரிய நாடகக்கலைகளான நிழல்-பொம்மலாட்ட (குறிப்பாக வையாங்க் குளிட் என்ற நிழல்-பொம்மலாட்ட) முறையில் சொல்லப்படுகின்றன.
No comments:
Post a Comment